வெள்ளி, 9 அக்டோபர், 2009

என் முதல் திருட்டு

எனக்கு ஒன்பது வயதிருக்கும்,சரியாக ஞாபகம் இல்லை.ஒரு நாள் தேங்காய் எண்ணெய் வாங்கி வர கடைக்கு அனுப்பினாங்க.நானும் போய் எண்ணெய் வாங்கி வந்தேன்.கடைக்காரர் 2 ரூபாய் நோட்டு மீதம் கொடுத்தார்.அந்த 2 ரூபாய் நோட்டு ஒரு மடிப்பு கூட இல்லாமல் அப்ப அச்சடித்து எடுத்தது மாதிரி புதுசாக இருந்தது.
எனக்கு அந்த ரூபாய் நோட்டு ரொம்பவே பிடித்து போயிற்று.அம்மாவிடம் கொடுக்ககூடாது என முடிவெடுத்தேன்; கேட்டால் கடைக்காரர் தரவில்லை என பொய் சொல்லாம் என்ற முடிவுடன் வீட்டிற்கு வந்தேன்.அம்மாவும் கேட்கவில்லை. சரி இனி பிரச்சினை இல்லை,எங்காவது ஒளித்து வைப்போம் என்ற முடிவுடன் ஒளித்து வைக்க இடம் தேடினேன்.சரி ஒரு வழியாக இடத்தையும் கண்டுபிடித்தேன். வீட்டிற்கு முன்னால் மணல் நிறைய கொட்டி வைத்திருந்தார்கள். அங்கு பெரியவர்கள் யாரும் வரமாட்டார்கள்.நானும் என் தங்கைகளும் தான் விளையாடுவோம் எனவே இது தான் நல்ல இடம் என முடிவு பண்ணி ஒரு டீ தூள் கவரினுள் காசைப் போட்டு மண்ணில் புதைத்து வைத்தேன்.யாருமே பார்க்கவில்லை;காசு பத்திரமாக என்னிடமே இருக்கிறது என்ற சந்தோசத்தில் இரண்டு வாரம் கடந்தது.
ஒரு நாள் மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் போது என் தங்கைகளிடம் ரூபாய் நோட்டை எடுத்து காட்டினேன்.என் தங்கை என் அப்பாவிடம் காசு இருக்கும் இடத்தை காட்டிவிட்டாள்.அவ்வளவு தான்; என் கதை கந்தல், எனக்காக வைக்கப்பட்டிருந்த புளிய மர குச்சியை எடுத்து சரியாகப் பின்னியது மட்டுமல்லாமல், அரை மணி நேரம் முட்டி கால் போடவும் வைத்து விட்டார். அன்றைக்கு நான் அழுதது பதிவு எழுதும் போதும் ஞாபகம் வருகிறது.
இப்போது என் 3 வயதாகும் இரு குழந்தைகளுக்கும் தனித் தனியாக உண்டியல் வாங்கி கொடுத்திருக்கிறேன்.என் கணவர் ஆபீஸ் போகும்போது 5 ரூபாய் கொடுப்பார்,இருவரும் உண்டியலில் போட்டுவிடுவர்.அது மட்டுமல்லாமல் ஏதாவது சில்லரைக் காசு வீட்டில் தவறுதலாகக் கிடந்தாலும் அவர்கள் எடுத்து உண்டியலில் போட்டு விடுவர்.

4 comments:

:))

ஹிஹி... எல்லாருக்கும் இதே போல் திருட்டு அனுபவம் இருக்கிறது.

அதிகமா எழுதுங்கள்.

நீங்கள் page view counter 2 இடங்களில் சேர்த்துள்ளீர்கள், தவறான விடை தரும். தயவு செய்து ஒரு இடத்தில் இருந்து நீங்கி விடவும்.

நன்றி.

:))

அசை போடும்பொழுது புன்னகை மட்டுமே வரவைக்கும் பால்ய கால திருட்டு அல்ல ஆசை...

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு