சனி, 6 பிப்ரவரி, 2010

உனக்கும் எனக்கும் I

திருமண வாழ்க்கை என்பது மனைவியை அடக்கி ஆள்வதும் அல்ல; மனைவிக்கு அடங்கி வாழ்வதும் அல்ல.உனக்குள்ளே ஆயிரம் கேள்விகளும் ,குழப்பங்களும் இருக்கும் போது ஏன் உன் மனைவிக்குள்ளும் இருக்ககூடாது.

பெண்ணை பூவென வருணித்த ஆணினமும் உண்டு, பெண்ணை புயலென வருணித்த ஆணினமும் உண்டு. எல்லா பெண்களும் பூ தான்! ஏன் உன் மனைவி உட்பட. உன் மனைவிக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் உண்டு.அவளை சம்பளமில்லா சமையல்காரியாகவும்,உன் குழந்தைக்கு நஞ்சில்லா பாலைக்கொடுக்கும் பால்காரியாகவும், ஏன் உன் வீட்டை காக்கும் தெருக்கோடி நாயாகவும் நடத்துகிறாய்?

தனக்கு திருமணம் என்று தெரிந்ததும் அவள் அடைந்த சந்தோஷம் எவ்வளவு என்று அடுத்த ஜென்மத்தில் பெண்ணாய் பிறந்து அனுபவி!

ஒரு நாளாவது உன் மனைவியின் ஆசையை கேட்டிருக்கிறாயா? நீ நினைக்கலாம் நான் மனைவியை சந்தோசமாக வைத்திருக்கலாம் என்று, ஆனால் அவள் விடும் ஆதங்க கண்ணீர் உனக்கு எங்கு தெரியப்போகிறது?

அவளின் உடம்பு வலிக்கு மருந்து கொடுப்பது பாசமல்ல.அவளின் மனவலியை தெரிந்து கொள்வதுதான் உண்மையான அன்பு.

உன் கையால் சம்பளம் வாங்கும் வேலைகாரன் உன்னை பார்த்து கேள்வி கேட்பதில்லையா?அவர்களையெல்லாம் உடனே கன்னத்தில் அறைவாயா? கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவாயா? அவர்களுக்கே பணிவைக்காட்டும் நீ; ஆயுள் முழுவதும் உனக்கு கடன் பட்டவளை நடு இரவில் கன்னத்தில் அறைவதும்,கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதும் முறையா?உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?

நான் சம்பாதிக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறாயே? 24 மணி நேரமும் உன் வாரிசுக்காக பூட்டிய வீட்டில் அடைபட்டு கொத்தடிமையாய் இருக்கிறாளே,அவள் உழைக்கவில்லையா?

அவள் சம்பாதிப்பது நம்பிக்கையை,அதனை உங்களால் மதிப்பிட முடியுமா?
நீங்க மதிப்பிடக்கூடிய ஊதியத்தை தான் சம்பதிக்கிறீர்கள்.ஆனால் மனைவியோ உங்களால் மதிப்பிட முடியாத அளவிற்கு சம்பாதிக்கிறாள். ஆதலால் அவள் உங்களை விட குறைந்தவள் அல்ல.

ஒரு நாள் ஒரு மனைவியாய் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் அவள் வலி.


எல்லா மனைவியும் கணவனிடம் கேட்பது ஒன்று மட்டும் தான்; உனக்கும் எனக்கும் தனிமை வேண்டும்.உன்னோட விஷயத்தை தனிமையில் பேசு, தனிமையில் புரிய வை.

மனைவி என்ற உறவை தவிர
எல்லா உறவும்
உன்னை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் தான்!

இதை புரியும் நேரம் வரும் போது
நீ முதுமையில்
உன் பேரனுக்கு அனுபவங்களை
தத்துவமாய் பிதற்றிக் கொண்டிருப்பாய்!

அவன் சொன்னான் பொண்டாட்டிய அடிச்சா திருந்துவான்னு,அடிச்சுக்கிட்டே இருந்தீங்க்கன்னா, அது போல முட்டாள் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

பெண்ணிற்கு திருமணம் என்பது ஒரு வேலி.இன்று அந்த வேலியே பயிரை மேய்ந்துகொண்டிருந்தால்?

இளமை உன்னுடன் என்றும் வராது.

இளமையில் உன் மனைவியை
சந்தோசப்படுத்து!

அப்போது தான்
முதுமையில் அவள் உன்னை
சந்தோசப்படுத்துவாள்!

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு