சனி, 24 டிசம்பர், 2011

பிஞ்சு மனதில் மதத்தை விதைக்கலாமா?

எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு நாலாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை  ஒரு ஸ்டார் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டாள். எங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்களைப் பார்த்து ரொம்பவே ரசித்தாள். அவள் தந்த ஸ்டாரையும் கட்டி அழகுப் பார்த்தாள்.
 அவள் ஆர்வத்தைப் பார்த்து, இந்த ஸ்டாரை உன் வீட்டிலேயே கட்டியிருக்கலாமே என்றேன்.வீட்ல கட்டுவதற்குத் தான் வாங்கினேன்; ஆனால் கிறிஸ்துமஸ் முடியறது வரைக்கும் கட்டக்கூடாது.அப்புறமா கட்டிக்கோ என் அம்மா சொன்னாங்க; கிறிஸ்துமஸ் முடிஞ்சதுக்கப்பறம் எனக்கு கொடுங்க என்றாள்.
எனக்கு அவளோட அம்மா மேல அப்படி ஒரு கோபம் வந்தது. அது ஒண்ணும் பிரச்சினை இல்லை யார் வேண்டுமானாலும் கட்டலாம் என்றேன். அவள் சிரித்தாள்.
பெற்றோரே இப்படிப்பட்ட நிகழ்வுகள் மதவாத்தை வளர்க்கலாம்.ஆனால் கண்டிப்பாக மனிதநேயத்தை வளர்க்காது.

வியாழன், 7 ஏப்ரல், 2011

முதியோரை கவனியுங்கள்

நான் ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும்போதும் எங்கள் உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம்.உறவினரின் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவர் எப்போதும் வீட்டிற்கு வெளியே தான் ஒரு கட்டிலில் படுத்திருப்பார்.எந்த தடவை ஊருக்கு போனாலும் அவரை பார்ப்பேன்.இந்த தடவை ஊருக்கு போகும்போது,தாத்தாவையும் காணவில்லை,கட்டிலையும் காணவில்லை
.
என் உறவினரிடம் தாத்தாவை காணோம் எங்கே என்று கேட்டதற்கு; தாத்தா இறந்துட்டாங்க,ரொம்பவே கஷ்டப்பட்டாரு.கண்ணும் தெரியலை,எழும்பவும் முடியாது.படுக்கையிலேயெ தான் டாய்லெட் போயிட்டிருந்தாரு.குளிக்க வைக்க கூட ஆளில்லை.அன்பீய கூட்டத்திலிருந்து தான் பெண்கள் வந்து வாரத்துக்கு ஒரு முறை குளிப்பாட்டினாங்க.உடம்பெல்லாம் ஒரெ ஸ்மெல்,யாரும் பக்கத்துலேயே போகமாட்டாங்க.
பசங்க யாரும் திரும்பி பார்க்கவே இல்ல.அந்த அம்மா(மருமகள்) தான் கொஞ்சமாவது பாத்துது.

அவங்க சொன்னதும் என் கண்களில் கண்ணீர் வந்தது.நான் எதுவும் பேசவில்லை.என்ன இந்த முதுமை;நாளைக்கு நானும் சந்திக்க போகிறேன் என்ற பயத்தில்.

அவங்க வீட்டை பார்த்தால் யாரானாலும் பிரமிச்சு போவாங்க.பசங்க பெரிய வேலையில் இருக்கிறாங்க.ஆனா தாத்தா மழையிலும்,வெயிலிலும்,குளிரிலும் வெளியே தான்.

இது போல எத்தனையோ முதியோர் கடைசியில் கஷ்டப்படுகின்றனர்.

எல்லா இளைஞர்களும் 80 வயதிலும் இளமை நமக்கு மட்டும் கூடவரும் என  நினைக்கின்றனர்.நமக்கு முன்னால் யாராவது 80 வயதில் ஊன்றுகோலில்லாமல் இருந்ததுண்டா ? இல்லையே.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்வாங்க,"பழுத்த இலை விழும்போது பச்சை இலை சிரிக்குமாம்"

இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். இது ஒவ்வொரு இளைஞர் மனதில் இருந்தால் போதும் என நினக்கிறேன்.

உங்க அம்மா அப்பா தாத்தா,பாட்டி கூட நேரம் செலவிடவில்லையென்றால் என்ன,நீங்கள் உங்கள் கல்லூரியில் நடந்தவற்றை சொல்லுங்கள்.கடைசியில் பார்த்த சினிமா பற்றி பேசுங்க.அவங்க உடல் நலனை விசாரியுங்கள்.உடனே அவர்களும் அவங்களுக்கும் ஒரு இலமை இருந்ததை உங்களுக்கு சொல்லுவார்கள். 

புதன், 6 ஏப்ரல், 2011

உரசல்கள்

நானும் தாய் மடியில்
தவழ்ந்த காலங்கள்
இன்று என் கண்முன்னெ
மங்கிய பிம்பங்க்ளாய்!

நடக்க கற்றுக் கொடுத்த
என் தாத்தாவிற்கு நானெ
 ஊன்றுகோலாய்ப் போன காலங்கள்

மீனென நினைத்து தலைபிரட்டையை
கண்ணாடி பாட்டிலில் வளர்த்தது

பக்கத்து வீட்டு நண்பர்களுடன்
நீர் வற்றிய குளத்தில்
கபடி விளையாடியது

இன்று மழை வருமா? வராதா?
இது என் அப்பாவின் கவலை
எனக்கோ
இன்று
கணக்கு வகுப்பில்
அடி கிடைக்குமா? கிடைக்காதா?

ஒற்றை மைனா பார்த்தால்
அடி கிடைக்குமாம் என
இரட்டை மைனா தேடி
சோலைக்கு போன ஞாபகம்

பெப்சியும் கோக்கும்
ருசித்ததில்லை
பதநீருக்கும்,இளனீருக்கும் பஞ்சமில்லை

காதல் நோயில் விழுந்தெழுந்தேன்
இளமை என்னையும் விடவில்லை!
திங்கள், 6 செப்டம்பர், 2010

என் இணைய உலகம்

தொலைவினால் கருகிப் போன நட்பு
மீண்டும் மலர்ந்தது
 ஆர்குட்டால்!

நான் மட்டும் பார்த்து ரசித்த
என் வீட்டு தோட்டம்
உங்களுக்காக பிகாசாவில்!


என் தெரு மட்டும் கண்டு ரசித்த
தெரு கூத்து
உலகுக்காக யூ ட்யூபில்!


நான் மட்டும் எழுதிக் கிழித்த
கிறுக்கல்கள்
தமிழர்களுகாக ப்ளாகரில்!


என் மூளைக்கு தீனி போட
யாசிக்கிறேன்
கூகிள் ஆண்ட வரை!


புறா விடு தூது தேவையில்லை
இருக்கவே இருக்கு
ஜீ-மெயில் தூது!


கடல் கடந்தும் இலவசமாய் பேச
வசதியாய் இருக்கு
கூகிள் டாக்!

செவ்வாய், 29 ஜூன், 2010

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்.............

      நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்திருகிறேன்.என்னை திரும்பவும் எழுத அழைத்த பிரியமுடன் வசந்த் தம்பிக்கு நன்றி.தங்கமணி பிரபு அவர்களுக்கும் நன்றி.
எழுத வெறி இருந்தும்,  வந்த எதிர்ப்பை  ஏற்று எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

இதோ இந்த கவிதையுடன் மீண்டும் உங்களுடன்...


வெறுமை

கண்கள் ரசிப்பது
ரோஜா பூவை தான்
ஆனால் மனம் சொல்வதோ
அதன் முள்ளால் வந்த
 வலியையே...


சனி, 6 பிப்ரவரி, 2010

உனக்கும் எனக்கும் I

திருமண வாழ்க்கை என்பது மனைவியை அடக்கி ஆள்வதும் அல்ல; மனைவிக்கு அடங்கி வாழ்வதும் அல்ல.உனக்குள்ளே ஆயிரம் கேள்விகளும் ,குழப்பங்களும் இருக்கும் போது ஏன் உன் மனைவிக்குள்ளும் இருக்ககூடாது.

பெண்ணை பூவென வருணித்த ஆணினமும் உண்டு, பெண்ணை புயலென வருணித்த ஆணினமும் உண்டு. எல்லா பெண்களும் பூ தான்! ஏன் உன் மனைவி உட்பட. உன் மனைவிக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் உண்டு.அவளை சம்பளமில்லா சமையல்காரியாகவும்,உன் குழந்தைக்கு நஞ்சில்லா பாலைக்கொடுக்கும் பால்காரியாகவும், ஏன் உன் வீட்டை காக்கும் தெருக்கோடி நாயாகவும் நடத்துகிறாய்?

தனக்கு திருமணம் என்று தெரிந்ததும் அவள் அடைந்த சந்தோஷம் எவ்வளவு என்று அடுத்த ஜென்மத்தில் பெண்ணாய் பிறந்து அனுபவி!

ஒரு நாளாவது உன் மனைவியின் ஆசையை கேட்டிருக்கிறாயா? நீ நினைக்கலாம் நான் மனைவியை சந்தோசமாக வைத்திருக்கலாம் என்று, ஆனால் அவள் விடும் ஆதங்க கண்ணீர் உனக்கு எங்கு தெரியப்போகிறது?

அவளின் உடம்பு வலிக்கு மருந்து கொடுப்பது பாசமல்ல.அவளின் மனவலியை தெரிந்து கொள்வதுதான் உண்மையான அன்பு.

உன் கையால் சம்பளம் வாங்கும் வேலைகாரன் உன்னை பார்த்து கேள்வி கேட்பதில்லையா?அவர்களையெல்லாம் உடனே கன்னத்தில் அறைவாயா? கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவாயா? அவர்களுக்கே பணிவைக்காட்டும் நீ; ஆயுள் முழுவதும் உனக்கு கடன் பட்டவளை நடு இரவில் கன்னத்தில் அறைவதும்,கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதும் முறையா?உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?

நான் சம்பாதிக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறாயே? 24 மணி நேரமும் உன் வாரிசுக்காக பூட்டிய வீட்டில் அடைபட்டு கொத்தடிமையாய் இருக்கிறாளே,அவள் உழைக்கவில்லையா?

அவள் சம்பாதிப்பது நம்பிக்கையை,அதனை உங்களால் மதிப்பிட முடியுமா?
நீங்க மதிப்பிடக்கூடிய ஊதியத்தை தான் சம்பதிக்கிறீர்கள்.ஆனால் மனைவியோ உங்களால் மதிப்பிட முடியாத அளவிற்கு சம்பாதிக்கிறாள். ஆதலால் அவள் உங்களை விட குறைந்தவள் அல்ல.

ஒரு நாள் ஒரு மனைவியாய் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் அவள் வலி.


எல்லா மனைவியும் கணவனிடம் கேட்பது ஒன்று மட்டும் தான்; உனக்கும் எனக்கும் தனிமை வேண்டும்.உன்னோட விஷயத்தை தனிமையில் பேசு, தனிமையில் புரிய வை.

மனைவி என்ற உறவை தவிர
எல்லா உறவும்
உன்னை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் தான்!

இதை புரியும் நேரம் வரும் போது
நீ முதுமையில்
உன் பேரனுக்கு அனுபவங்களை
தத்துவமாய் பிதற்றிக் கொண்டிருப்பாய்!

அவன் சொன்னான் பொண்டாட்டிய அடிச்சா திருந்துவான்னு,அடிச்சுக்கிட்டே இருந்தீங்க்கன்னா, அது போல முட்டாள் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

பெண்ணிற்கு திருமணம் என்பது ஒரு வேலி.இன்று அந்த வேலியே பயிரை மேய்ந்துகொண்டிருந்தால்?

இளமை உன்னுடன் என்றும் வராது.

இளமையில் உன் மனைவியை
சந்தோசப்படுத்து!

அப்போது தான்
முதுமையில் அவள் உன்னை
சந்தோசப்படுத்துவாள்!

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பதிவுலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது

என்னமோ ஒரு மாதமாக நான் பதிவை வாசிப்பதுடன் நிறுத்திவிடுகிறேன்.பின்னூட்டப்பெட்டியை திறக்கிறேன் ஆனாலும் பின்னூட்டமிட என் மனது சற்று யோசிக்கிறது.

சில பதிவர்கள் நல்ல தகவல் தொடர்புடைய பதிவுகளையே பதிவுலகத்துக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இளைய சமுதாயத்தை எவரெஸ்ட் சிகரம் ஏற வழிகாட்டுகிறார்கள்.

சில பதிவர்கள்  சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

சில பதிவர்கள் அனுபவங்களை  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சில பதிவர்கள் இளைய சமுதாயத்தை தற்கொலை பாறைக்கு அழைத்து செல்கிறார்கள்.அய்யா வாங்க,அம்மா வாங்க,  பின்னூட்டமிடுங்க என பதிவுலக பிச்சையெடுக்கிறார்கள்.
சரி போனா போகுது என மனசுக்கு தோணினதை பின்னூட்டமாக்கினால். மறுநாள் sidebar-ல் விமர்ச்சன பின்னூட்டம்.
இப்படிப்பட்ட கூவம் ஆற்று கூத்தாடிகளை எப்படி களை எடுப்பது?

அப்படிபட்ட குப்பை பதிவுகளுக்கு கூட எப்படித்தான் பிரபல இடுக்கையில் இடம் கிடைக்கிறது?
இவர்தான் பல Usernames -ல் ஓட்டளிகிறாரோ!


பழைய இடுகைகள்