வெள்ளி, 16 அக்டோபர், 2009

முதல் ரேங்க் உங்கள் குழந்தை எடுக்கவில்லை என கவலைப்படுகிறீர்களா?

என்னோட தங்கை ஒரு நாள் திடீரென ஃபோன் பண்ணினா.எனக்கு ஒரே ஆச்சரியம்,ஏன்னா அவ ஒரு நாள் கூட ஃபோன் பண்ணியதே இல்ல,எப்போதும் நான் தான் பண்ணுவேன். என்ன ஃபோன் பண்ணியிருக்க என்ன பிரச்சினை என பதற்றத்துடன் கேட்டேன்.
எம் பொண்ணு இந்த முறை 15 ஆவது ரேங்க் எடுத்திருக்கா, எனக்கு ஒரே பதற்றமா இருக்கு என்றாள்.இது தானா விசயம்,என சற்று நிம்மதியடைந்தேன்.
அவ பொண்ணு என்ன படிக்கிறாண்ணு தெரிங்ஞ்சுகிட்டா நீங்களே வருத்தப்படுவீங்க வெறும் LKG தான்!.எவ்வளவு சதவீதம் மதிப்பெண் எனக் கேட்டேன், வெறும் 83 சதவீதம் தான், என்ன பண்ண என ஒரே கவலையுடன் சொன்னாள்.
போன தடவ 7-வது ரேங்க்.இப்ப 15 என ஒரே குமுறல் தான் அவள்.எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல.
சரி நீ ஒண்ணும் கவலப் படாத,அவ நல்ல சதவீதம் மார்க் எடுத்திருக்கா,அவ முதல் ரேங்க் எடுக்கணும்னு நீ ஆசப்படுறது தப்பு.நீ அவளை அடிக்கவோ, திட்டவோ செய்யாத, நீ எப்பவுமே அவளிடம் முதல் ரேங்க் எடுக்கணும்னு சொல்வத விட,மக்கள் இப்ப இவ்வளவு சதவீதம் மதிப்பேண் எடுத்திருக்க,மக்கள் நல்லா படிக்கிற என அவளை பராட்டு. அடுத்த தடவை இதை விட கொஞ்சம் அதிகம் மதிபபெண் எடுக்கணும் என புரியும் படியாகச் சொல்லு என அறிவுரை சொன்னேன்.
மேலும் எப்பவுமே குழந்தைய அடுத்த குழந்தையுடன் போட்டி போட வைக்காதே;அதனால குழந்தைக்கு அடுத்த குழந்தை மீது வெறுப்பு தான் வரும்,மேலும் போறாமை,போட்டி மனப்பான்மை,கோபம் என பல கெட்ட குணங்கள் வரும்.அது தவிர  ,தாழ்வுமனப்பான்மை,மன அழுத்தம் என  மனவியல் ரீதியாகவும் குழந்தை பதிக்கப்பட வாய்ப்பிருக்கு.எனவே அவளுக்கு போட்டி மனப்பான்மையை ஊட்டாதே. அவளுக்குள்ளேயே ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கு என அட்வைஸ் பண்ணினேன். உம் என சொல்லிவிட்டு ஃபோனை கட் பண்ணினாள்.
ஓடித்திரிய வேண்டிய வயதில ரேங்க் எடு எடுன்னா எப்படிங்க முடியும்?
இது போல நிறைய தாய்மார்கள் இன்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், இந்த பதிவு அவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

என் முதல் திருட்டு

எனக்கு ஒன்பது வயதிருக்கும்,சரியாக ஞாபகம் இல்லை.ஒரு நாள் தேங்காய் எண்ணெய் வாங்கி வர கடைக்கு அனுப்பினாங்க.நானும் போய் எண்ணெய் வாங்கி வந்தேன்.கடைக்காரர் 2 ரூபாய் நோட்டு மீதம் கொடுத்தார்.அந்த 2 ரூபாய் நோட்டு ஒரு மடிப்பு கூட இல்லாமல் அப்ப அச்சடித்து எடுத்தது மாதிரி புதுசாக இருந்தது.
எனக்கு அந்த ரூபாய் நோட்டு ரொம்பவே பிடித்து போயிற்று.அம்மாவிடம் கொடுக்ககூடாது என முடிவெடுத்தேன்; கேட்டால் கடைக்காரர் தரவில்லை என பொய் சொல்லாம் என்ற முடிவுடன் வீட்டிற்கு வந்தேன்.அம்மாவும் கேட்கவில்லை. சரி இனி பிரச்சினை இல்லை,எங்காவது ஒளித்து வைப்போம் என்ற முடிவுடன் ஒளித்து வைக்க இடம் தேடினேன்.சரி ஒரு வழியாக இடத்தையும் கண்டுபிடித்தேன். வீட்டிற்கு முன்னால் மணல் நிறைய கொட்டி வைத்திருந்தார்கள். அங்கு பெரியவர்கள் யாரும் வரமாட்டார்கள்.நானும் என் தங்கைகளும் தான் விளையாடுவோம் எனவே இது தான் நல்ல இடம் என முடிவு பண்ணி ஒரு டீ தூள் கவரினுள் காசைப் போட்டு மண்ணில் புதைத்து வைத்தேன்.யாருமே பார்க்கவில்லை;காசு பத்திரமாக என்னிடமே இருக்கிறது என்ற சந்தோசத்தில் இரண்டு வாரம் கடந்தது.
ஒரு நாள் மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் போது என் தங்கைகளிடம் ரூபாய் நோட்டை எடுத்து காட்டினேன்.என் தங்கை என் அப்பாவிடம் காசு இருக்கும் இடத்தை காட்டிவிட்டாள்.அவ்வளவு தான்; என் கதை கந்தல், எனக்காக வைக்கப்பட்டிருந்த புளிய மர குச்சியை எடுத்து சரியாகப் பின்னியது மட்டுமல்லாமல், அரை மணி நேரம் முட்டி கால் போடவும் வைத்து விட்டார். அன்றைக்கு நான் அழுதது பதிவு எழுதும் போதும் ஞாபகம் வருகிறது.
இப்போது என் 3 வயதாகும் இரு குழந்தைகளுக்கும் தனித் தனியாக உண்டியல் வாங்கி கொடுத்திருக்கிறேன்.என் கணவர் ஆபீஸ் போகும்போது 5 ரூபாய் கொடுப்பார்,இருவரும் உண்டியலில் போட்டுவிடுவர்.அது மட்டுமல்லாமல் ஏதாவது சில்லரைக் காசு வீட்டில் தவறுதலாகக் கிடந்தாலும் அவர்கள் எடுத்து உண்டியலில் போட்டு விடுவர்.

புதன், 7 அக்டோபர், 2009

மதம் நமக்கு என்ன செய்தது?

இன்று நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் மதம் தான்! இது அனைவரும் அறிந்த ஒன்று,என்றாலும் நாம் மதம் தான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்வது இல்லை.ஏன் நாம் சொல்ல தயங்குகிறோம்? ஏன் கடவுள் நம்மிடம் கோபித்துவிடுவாரோ என்ற பயம் தான்!

எதற்கு நாம் பயப்படவேண்டும்? எதெற்கு இந்த மதபிரிவினை? நீ முஸ்லீம்,நான் கிறிஸ்தவன்,அவன் இந்து என்று நாமாகவே ஏன் பிரித்து வைத்து கொள்கிறோம்? ஏதற்கு இந்த குண்டு வெடிப்புகள்? எதற்கு இந்த வன்முறைகள்? எதெற்கு இந்த அறிவியல் விஞ்ஞானத்தை அழிவிற்கு பயன்படுத்துகிறோம்?

மனிதனை மதம் பிடிக்க வைக்கிற மதவாதம் தான் இதற்க்கேல்லாம் ஒரே விடை.

மதம் நம்மை நல்வழிபடுத்த உருவாக்கப்பட்ட ஓன்று. அதனை நாம் தீவினைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

ஏன் நீ எந்த கடவுளையாவது வழிபடு, பக்கதது வீட்டுக்காரன் யாரை வழிபடுகிறான் என எதற்கு பார்க்கிறாய்? உங்கள் இருவரின் இரத்தமும் ஓன்று தானே! நிறத்தில் வேறுபாடு இருக்கிறதா சொல்? இருவரின் கண்ணீரும் துவர்ப்பு தானே! உன் உயிர் காக்க ஏன் ஒரு முஸ்லீம் இரத்தம் தந்து உதவுவதில்லையா? மனிதனேயம் இருந்தால் போதும் மனிதனுக்கு!மதனேயம் உன் வாசல்படியுடன் நிற்கட்டும்.
இன்று மதங்கள் நீ கிறிஸ்தவன்,நான் முஸ்லீம், அவன் இந்து என மட்டுமே கற்றுதந்திருக்கிறது.ஏனோ நாம் மனிதர்கள் என்பதை கற்று தர மறந்துவிட்டது.
இன்று மதங்கள் புனித நூலைத் தூக்க வேண்டிய கைகளை துப்பாக்கி தூக்க பழக்குகிறது.
இன்று மதங்கள் அன்பை போதிக்கவேண்டிய தருணத்தில மதவாதத்தை போதிக்கிறது.
இன்று மதஙகள் சகோதரத்துவத்தை எடுத்துரைக்க வேண்டியதை மறந்து பிரிவினையை ஞாபகப்படுத்துகிறது.
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
மதவாதம் வேண்டாமே!
மனிதநேயம் காப்போமே!

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காத்திருக்கிறேன்

* காத்திருக்கிறேன்
மார்கழி மாத நள்ளிரவுக்காய்
ஊர் துயில் மூச்சு விடும்போது
ஒரு கோப்பை கோலமாவுடன்
வா...............
உன் வாசலில் கோலமிட...
* காத்திருக்கறேன்
என் வீட்டு ஜன்னலில்
உன்னழகை கோலமிட...
* உன் வாசல் கோலம்
முடிவடையும்- பனிப்பொழுது விடியும்போது !
* என்னவோ
என் ஜன்னல் கோலம்
முடிவடையாது...
இது தொடரும் - ஒரு காதல் கதை
நீ எனக்கு மனைவியாகும் வரை!

சனி, 3 அக்டோபர், 2009

அப்பாவ நாய் கடிச்சிடிச்சி

நேற்று இரவு என் கணவர் பால் வாங்குவதற்காக கடைக்கு போயிருந்தார்.எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.என் மூன்று வயது மகள் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் அம்மா அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என மழலைத்தமிழில் கத்தினாள்.உடனே நான் அப்பாவ நாய் கடிக்காது என் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து என் கணவர் பால் வாங்கி வந்தார்.சட்டையெல்லாம் ஒரெ சேறு.என்ன ஆச்சு சட்டையெல்லாம் இப்படி மண்ணா இருக்கு எனக்கேட்டேன். ஒரு நாய் என் மேல ஏறி கடிக்கபாத்துது என்றார்.என் மகளுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அப்ப நான் சொன்னேன் காஷ்யா நாய் குரைக்கிற சத்தத்தை கேட்ட உடனேயே,அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என சொன்னாள் என்றேன்.அவருக்கு ஒரே ஆச்சரியம்.

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு