செவ்வாய், 24 நவம்பர், 2009

சில நேரங்களில் சில நிகழ்வுகள்

சில நேரங்களில்  சில நிகழ்வுகள் நமக்கு தெரியாமலேயே நடக்கின்றன.இன்று காலையில் கடைக்கு செல்லும் போது ஒரு பலூன்காரர் ரோட்டோரத்தில் பலூன் விற்றுக்கொண்டிருந்தார். என்னோட பசங்களுக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் ஆப்பிள்,இதய வடிவ பலூனென்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சரி பலூன் வாங்க்கலாம் வாங்கலாம் என்று விலை கேட்டேன்.ஒரு பலூன் பத்து ரூபாய் என கன்னடத்தில் சொன்னார் பலூன்காரர். பலூன் பொட்டுமா என நான் கேட்க,அவரோ பொட்டாது என்றார்.சரி அப்ப இரண்டு ஆப்பிள் பலூன் நல்லதாப் பாத்துக் கொடுங்க என்றேன்.  அவர் பலூனை தொட்டதும் டமார் என்ற சத்தத்துடன் பலூன் வெடித்தது.அடுத்த நொடியிலேயே நான் எஸ்கேப்.எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.உடனேயே போன் போட்டு என் கணவரிடம் சொன்னேன்.அவர் சிரித்துகொண்டே,உனக்கு கொழுப்பு தான்; பாவம் அவனுக்கு 10 ரூபாய் வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்து விட்டார்.
பலூன்காரர் என்னை எப்படியெல்லாம் திட்டியிருப்பாரோ?

புதன், 11 நவம்பர், 2009

கெஞ்சல்கள்

என் முந்தைய பதிவை வாசித்த,ஓட்டளித்த,பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

ஆப்பிள் கன்னமுடையவளே
என் அழகு தேவதையே
நீ சிரிக்கும்போது விழும்
கன்னக் குழிகளை
பார்வையால் முத்தமிடு என
என் கண்கள் கெஞ்சுகிறது!

உன் கயல்விழி கழுகுப்பார்வை
என்னை சற்று மிரட்டினாலும்
அவள் கருவிழி
 பிம்பத்துக்காய் காத்திரு என
என் உள்ளம் கெஞ்சுகிறது!

நீ சுமந்து வரும்
மல்லிகை பூ வாசம்
மாசில்லாத ஆக்ஸிஜனாம்
இன்னும் சுவாசித்துவிடு என
என் நுரையீரல் கெஞ்சுகிறது!

எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது
அவளென்ன மெழுகுச் சிலையோ
அருகில் போய்
 தொட்டுப் பார் என
என் கைகள் கெஞ்சுகிறது!

இப்படி எத்தனை நாள் தான்
கவிதை வடிப்பாய்
உன் இதயக்கோவிலுக்குள்
அவளுக்கு விளக்கேற்று என
 என் இதயம் கெஞ்சுகிறது!

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam!

    என்   முந்தைய பதிவை வாசித்த,வாக்களித்த,கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!       
      நான் MSc. படித்துகொண்டிருக்கும் போது, எங்கள் networking paper எடுத்த பேராசிரியை ரொம்பவே Strict.அவர் வகுப்பு என்றாலே எங்களுக்கு தூக்கம் வரும்.தினமும் ஒரு மாணவனையாவது வகுப்பிலிருந்து வெளியேற்றாமல் வகுப்பு நடத்தியதில்லை.
அவர் வகுப்பு நடத்தும் போது எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்,லேசாகத் திரும்பினாலும் ,உடனே வெளியே அனுப்பி விடுவார்.வெளியே அனுப்புவது மட்டும் என்றால் வகுப்பே வெளியே போக ரெடியாயிருந்திருக்கும்.ஆனால் வெளியே அனுப்பும் student க்கு அட்டென்டன்ஸ்-ம் கிடையாது.
அட்டென்டன்ஸ்க்கு பயந்து எப்படியாவது அவங்க முகத்தை பார்த்துக்கொண்டே இருப்போம்.
      ஒரு நாள் அவங்க பாடம் நடத்திகொண்டிருந்த வேளையில் ஒரு தடவை திரும்பி ஜன்னலைப் பார்த்தேன்.அவ்வளவு தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாங்க,எனக்கு விடை தெரியவில்லை.நான் பேசாமல் நின்றேன். வெளியே போ என்றாங்க. நானும் மறுபேச்சு பேசாமல் வெளியே போனேன்.வகுப்பே அமைதியானது;ஏனென்றால் என்னுடைய முகவரி வகுப்பில் உள்ள் ஒருவருக்கு கூடத் தெரியாது.அப்படி பட்ட சுபாவம் உள்ளவள் நான்,வகுப்பில் பக்கத்தில் இருக்கும் மாணவியுடன் கூட பேசியதில்லை.எனக்கும் மனதுக்குள் ரொம்பவே கவலையாக இருந்தது.
         மறுநாள் காலையில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது.இதே மேம் தான் எனக்கு Lab Incharge.நான் Practical செய்து கொண்டிருக்கும் போது என்னருகில் வந்து ப்ரொக்ராம்ஸ் போட்டாச்சா என கேட்டாங்க.ஆம் என என் Practical Note ஐ காட்டினேன்.சரி சரி அப்புறம் பார்க்கிறேன்.நீ கிறிஸ்டியனா? என்று கேட்டானங்க.ஆமா என்றேன்.
"நேற்றைக்கு உன்ன வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினதுக்கு சாரிம்மா"என்றாங்க.எனக்கு ஒரே ஆச்சரியம்.நோ ப்ராப்ளம் மாம் என்றேன் சிரித்துக்கொண்டே!.
மேம் சாரி கேட்ட விஷயம் Computer Depaartment ஐ ஆச்சரியப்பட வைத்தது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

அதிர்ச்சிக்குள்ளாக்கிய என் கணவரின் பிறந்த நாள்!

நவம்பர் 9, என் கணவரின் பிறந்த நாள்,எல்லா பிறந்த நாளையும் அவருக்கு ஞாபகப்படுத்துவது நான் தான்!.நவம்பர் ஒன்றாம் தியதியே ஆயத்தங்கள் செய்ய தொடங்கி விடுவேன். எல்லா பிறந்த நாளுக்கும் ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுப்பது வழக்கம்.
சரி இந்த தடவை எப்படி கொண்டாடலாம் என யொசித்துக்கிண்டிருந்தேன், அப்பொது இந்த தடவை அவருடைய பிறந்த நாளை முன் கூட்டியே ஞாபகபடுத்தாமல் மாலையில் திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என தீர்மானித்தேன்.

இன்று காலையில் எழும்பி ஒரு வாழ்த்து கூடச் சொல்லவில்லை என் குழந்தைங்க Happy Birthday என் சொல்லிக்கொண்டே நடந்தனர்(நிஜமாகவே அப்பாவுக்கு பிறந்த நாள் என் தெரிய வாய்ப்பில்லை,அவங்களுக்கு இப்ப தான் மூன்றே கால் வயதாகிறது).
என் மனசுக்குள்ள என்ன கலர் T-Shirt எடுக்கலாம்.XL size எடுக்கலாம் XXL ரொம்பவே பெரிசா இருக்கும். கேக் எந்த கடையில வாங்கலாம்? ப்ளாக் பாரஸ்ட் தான் அவருக்கு பிடிக்கும் ஆனா குட்டீஸ் தொட்டு கூட பாக்க மாட்டாங்க, சரி அத கடையில போய் decide பண்ணிக்கலாம்.
சரி சாப்பாடு மட்டன் பிரியாணியா இல்ல சிக்கன் பிரியாணியா?  சிக்கன்னா ஃப்ரெஷ் சிக்கன் வாங்கலாம், மட்டன்னா ஃப்ரெஷ்ஷா இருக்குமா எனத் தெரியவில்லை.கடைசியா சிக்கன் வாங்கலாம் என்றே முடிவு செய்தேன்.கொஞ்சம் decorative things வாங்கணும்.ப்ரியாணி ரைஸ் இல்ல அது வாங்கணும், என என் மனதில் பல  எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தன.அவர் ஆபீஸ் போவது வரைக்கும் எதுவும் சொல்லவில்லை.
பசங்கள் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் ட்ரெஸ் பண்ணி கடைக்கு கிளம்புவதற்க்கு ரெடியானேன். கதவை பூட்டுவதற்கு கீயைத் தேடினேன்,கீயை காணோம்.உடனே என் கணவருக்கு போன் பண்ணினேன்.அவர் போன் எடுக்கவில்லை.திரும்பவும் வந்து கீயைத் தேடினேன்.கீயைக் காணோம்.திரும்பவும் போன் போட்டேன்.போன் எடுக்கவில்லை. உடனே "Where is the Key" ena SMS அனுப்பினேன்.உடனே போன் பண்ணி,கீ என் கைல இருக்கு,அவன் (என் தம்பி) கீ? எனறார். அது அவன் கைல இருக்கு என்றேன். நீ என்ன வெளியே போறியா? என்றார். ம் vegitables வாங்க போகணும்  என்றேன். சரி நான் Evening வாங்கி தறேன் என்றார்.இருவரும் வீட்டு கீயை எடுத்திட்டு ஆபீஸ் போங்க என சொல்லிவிட்டு  போனை வைத்தேன்.
இனியென்ன கொண்டாட்டம்? எல்லாமே எனக்கு பேரதிர்ச்சி ஆகிவிட்டது;
சரி இனி ப்ளாக் பார்ப்போம் என Computer-ஐ ஆன் பண்ணினேன்.
என் இனிய

 காதல் தெய்வத்துக்கு

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

புதன், 4 நவம்பர், 2009

புது மொபைல் வாங்கிட்டேன்

               கடந்த சனிக்கிழமை என் கணவரின் நண்பன் (நண்பன் என்று சொல்தை விட உடன் பிறவா தம்பி என்று சொல்வது தான் சரி.)  வீட்டிற்கு வந்திருந்தார்.எப்போது அவன் வீட்டிற்கு வந்தாலும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா? என் கேட்டு கிண்டலடிப்பது வழக்கம். இந்த தடவையும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா எனச் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

             என்ன அண்ணி "அந்த கொடுமையை எப்படி சொல்ல",என்று சலித்துகொண்டே புது மொபைலை காட்டினான்.அபபாடா இப்பவாவது புது மொபைல் வாங்கினியே;என்றேன் சிரித்துக்கொண்டே.பழைய மொபைல தீபாவளிக்கு ஊருக்கு போகும்போது பஸ்ல எவனோ திருடிட்டான்.மொபைல் இல்லாம ஆபீஸ்ல எதுவும் வேலை செய்ய முடியாது அதனால புதுசா  ஒரு மொபைல் வாங்கியிருக்கேன் என்றான்.

 பஸ்லயா,எப்படியப்பா திருட்டு போச்சு என்றேன்.

       நைட் 12 மணிக்கு ஒரு SMS வந்தது:அதை படிச்சிட்டு,மொபைல கையில வச்சிகிட்டே தூங்கிட்டேன். முழிச்சு பாத்தா மொபைல காணோம்.பஸ்ல கண்டக்டர்ட சொன்னேன்.பக்கத்துல இருந்தவன செக் பண்ணி பார்த்தார்,அவன் எடுக்கவில்லை என்றான்.எனக்கு அவன் தான் எடுத்திருப்பான் என தோன்றுகிறது என சொல்லி சங்கடப்பட்டான்.

வாங்கி எவ்வளவு நாளாச்சு என்றேன்.

          அது வாங்கி இரண்டரை வருஷமாச்சு அண்ணி,முரளியிடமிருந்து செகண்ட் ஹேண்டா, 2200 ரூவாக்கு வாங்குனது.நல்ல மொபைல் தொலஞ்சு போச்சு என்றான் (மொபைல் லட்சணம் எனக்கு தான் தெரியும்  Number Display ஆகாது, Key Pad ஐ பூதக்கண்ணாடி வைத்து தான் பார்க்கணும்)

எனக்கு இதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது. எப்படியோ புது மொபைல் வாங்கிட்ட என்றேன் சிரித்துகொண்டே.

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு